- எதிர்காலம் குறித்த அச்சங்களை உருவாக்குவதல்ல, என் நோக்கம். மாறாக, எதிர்காலம் குறித்த விருப்பங்களையும் புரிதல்களையும் முன்வைக்கிறேன். நிச்சயமாக, இப்போதுள்ள வாழ்க்கை வாய்ப்புகள் எதிர்காலத்தில் கிடைக்கப்போவதில்லை. உணவு, நீர், காற்று, நிலம் ஆகிய நான்கு வாழ்வாதாரங்களும் கடந்த முப்பதாண்டுகளுக்கு முன் இருந்த நிலையில் இப்போது இல்லை. இவை அனைத்தும் தரம் கெட்டவையாகவும், நஞ்சு மிகுந்தவையாகவும் மாற்றப்பட்டுள்ளன. பொருளாதாரம் எனும் அளவுகோல் இப்போது மிக மோசமான ஆதிக்கத்தில் இருக்கிறது. எல்லாவற்றையும் பொருளாதாரத்தின் வழியில் மட்டுமே அணுகும் மனநிலை வளர்ந்துவிட்டது.
அரசுத்துறை எனும் கருத்து அதிவேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளது. சமூகப் பாதுகாப்பிற்காகத்தான் அரசு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. மக்களுக்கும், நாட்டின் இயற்கை அமைப்பிற்கும் அரணாக இருக்க வேண்டியது அரசின் கடமை. இப்போது அரசு எனும் அமைப்பு, அதிகாரம் அற்றதாக மாறிக்கொண்டுள்ளது. தனியார் பெருநிறுவனங்கள்தான் நாட்டின் பெரும்பாலான தொழில்களை நடத்துகின்றன.
நிறுவனங்களின் பிடியில் உணவுத்துறை சிக்கிக்கொண்டுள்ளது. பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய வேளாண்மை, தனியார் நிறுவனங்களைப் பெருமளவு சார்ந்ததாகிவிட்டது. உரம், விதை, வேளாண் கருவிகள் ஆகியவற்றைத் தனியார் நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. அரசாங்கம் இவற்றுக்கான மானியத்தை மட்டும் தருகிறது. எல்லா மானியங்களும் குறைக்கப்படுகின்றன. வெகு விரைவில் வேளாண்மைக்கான மானியங்கள் நிறுத்தப்படும். அந்த நிலையில் வேளாண்மையின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் ஒரு சில தனியார் பெருநிறுவனங்களின் பிடிக்குள் சென்றிருக்கும்.
வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் பொதுச் சந்தைக்கே எடுத்துவர இயலாத நிலை உருவாகும். பெருநிறுவனங்கள் தமக்குள் கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டு, எல்லா விளைபொருட்களையும் தாங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப் போகின்றன.
அவ்வாறான சூழலில் உணவுப் பொருட்களின் விலை, கற்பனைக்கெட்டாத வகையில் இருக்கும். இப்போது ஆடம்பரங்களுக்காகக் கடன் வாங்கும் மக்கள், அடிப்படைத் தேவைகளுக்காகக் கடன் வாங்க வேண்டி வரும். உணவு மட்டுமல்ல, நீரும் இவ்வாறான நெருக்கடிகளுக்குள்ளாகும். இப்போதே குடிநீர் தனியார்மயமாகத்தான் இருக்கிறது. கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் மட்டும் அரசு குடிநீர் வழங்கிக்கொண்டுள்ளது. மாநகரங்களில் அரசு வழங்கும் நீரின் தரம் மோசமாகியுள்ளது. அந்தத் தரம் கெட்ட நீரும் போதுமான அளவுக்கு வழங்கப்படுவதில்லை.
ஏரிகள், குளங்கள் போன்ற இயற்கை நீர்க் கலன்களை ஏறத்தாழ இழந்துவிட்டோம். அவற்றைப் போற்றிப் பராமரிப்பதில், இந்தச் சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஏரி, குளங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் வணிக நிலங்களாக (real estate) மாற்றப்பட்டுள்ளன. அவற்றின் பரமாரிப்புக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகாரிகளும் ஊர் மக்களும் இணைந்து பங்கிட்டுக்கொள்கிறார்கள். அல்லது ஊர் மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசியல்வாதிகள் அப்பணத்தைச் சுருட்டுகிறார்கள்.
எவ்வளவு மழை பெய்தாலும் நீரை நிலத்தில் தேக்கிவைக்க இயலாத நிலைக்குத் தமிழகம் சென்றுவிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் பெய்த பெருமழையைத் தேக்கி வைத்திருந்தால், குறைந்தது இரண்டாண்டுகளுக்கு வேளாண்மை செய்திருக்கலாம்; குடிநீருக்கும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், வெறும் ஆறே மாதங்களில் அம்மழை நீர் வற்றிப்போனது. வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அன்றாடம் வந்து சேர்கிறது. இதுதான் நிலைமை.
பெரும்பான்மைச் சமூகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. இப்போக்கு முற்றிலும் மாறப்போவதில்லை என்பது என் எண்ணம்.
பெரும்பான்மையரிடம் உரையாடி, அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவது இயலாது என்றும் நான் நினைக்கிறேன். ஆகவே, இவ்வாறான புரிதல்கள் கொண்ட சமூகத்தினரிடம் உரையாடி அவர்கள் வழியாக எதிர்காலத்தைப் பற்றிய நல்ல விருப்பங்களை உருவாக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல, அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில், பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம். அரசும், நிறுவனங்களும் இணைந்து நமது இயற்கைச் சூழலை, அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கின்றன. இணைந்து காக்க வேண்டிய நாம், பிரிந்து கிடக்கிறோம். ஒரு சமூகமாக நாம் மாற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இந்தச் சமூகத்தில் இடம்பெறுவோர் அவரவர் பண்புகளால் தீர்மானிக்கப்படுகிறார்களே தவிர, வேறெந்தக் காரணிகளாலும் அல்ல. ஏழ்மையில் ஆழ்ந்து கிடப்போர், செல்வத்தில் வீற்றிருப்போர் எவராக இருந்தாலும் மரபுவழிப்பட்ட புதிய சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் போதும்.
இயற்கையையும் சகமனிதர்களையும் சுரண்டி வாழ்ந்த பாவங்களின் பலனாகத்தான் இவ்வளவு துன்பங்களும் வந்து சேர்ந்துள்ளன. இதுதான் என் கருத்து. இப்பாவங்களின் விளைவுகளிலிருந்து தப்ப வேண்டுமானால், முதலில் ‘நான் பாவங்களைச் செய்துள்ளேன்’ என மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும். பின்னர், ‘இனி சக மனிதர்களுக்கும் இயற்கையின் பிற அங்கங்களுக்கும் எதிராகச் சிந்திக்கவும் செயல்படவும் மாட்டேன்’ என்று முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தத் தீவினைச் சுழற்சியிலிருந்து வெளியேற இயலாது.
No comments:
Post a Comment