எனக்கு வலிமை இல்லை
---------------------------
நிஸார் கப்பானி
தமிழில்: ரவிக்குமார்
உன்னை மாற்றுகிற உனது பாதைகளை விளக்குகிற வலிமை
எனக்கில்லை
ஒரு பெண்ணை ஒரு ஆண் மாற்றிவிடமுடியும் என்பதை ஒருபோதும் நம்பாதே
அத்தகைய ஆண்கள் நடிப்பவர்கள்
தனது விலா எலும்புகளிலிருந்து பெண்களை உருவாக்கியதாக எண்ணுகிறவர்கள்
பெண் ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்படவில்லை
நீரின் ஆழத்திலிருந்து மேலெழும்பும் மீனைப்போல
நதியிலிருந்து பிரியும் ஓடையைப்போல
ஆண்தான் பெண்ணின் கருப்பையிலிருந்து உருவானவன்
ஆண்தான் பெண்ணின் விழிகள் எனும் சூரியனைச் சுற்றிவருகிறான்
ஆனால் ஒரு இடத்தில் நிலைத்திருப்பதாய் நினைத்துக்கொள்கிறான்
உன்னை அடக்கவோ பழக்கவோ உனது இயல்பூக்கங்களை ஆற்றவோ
என்னால் இயலாது
அது முடியாத வேலை
உன்மேல் எனது அறிவைப் பிரயோகித்தேன்
மூடத்தனத்தை சோதித்துப் பார்த்தேன்
எதுவும் பலன் தரவில்லை
வழிகாட்டலோ வசீகரமோ எதுவும்பயன் தரவில்லை
நீ இருப்பதுபோல
புராதனமாகவே இரு
***
உனது பழக்கங்களை என்னால் உடைக்கமுடியாது
முப்பது ஆண்டுகளாக
முன்னூறு ஆண்டுகளாக
நீ இப்படித்தான் இருக்கிறாய்
புட்டியில் அடைபட்டிருக்கும் புயல்
பெண்ணின் உடலொன்று இயல்பாக
ஆணின் வாசனையை அறிகிறது
இயல்பாக அதைத் தாக்குகிறது
இயல்பாக வெற்றிகொள்கிறது
***
ஒரு ஆண் தன்னைப்பற்றிச் சொல்வதை ஒருபோதும்நம்பாதே
அவன் சொல்வான் கவிதைகளை உருவாக்கினேனென்று
குழந்தைகளை உருவாக்கினேனென்று
பெண்தான் கவிதைகளை எழுதுகிறாள்
ஆண் அவற்றின்கீழ் தனது பெயரைப் பொறித்துக்கொள்கிறான்
பெண்தான் குழந்தைகளைப் பெறுகிறாள்
ஆண் மகப்பேறு மருத்துவமனையின் பதிவேட்டில் தந்தையென்று தனது பெயரை எழுதிக்கொள்கிறான்
***
உனது இயல்பை மாற்றும் வலிமை எனக்கில்லை
எனது புத்தகங்கள் உனக்குப் பயன்படாது
எனது நம்பிக்கைகள் உன்னை சமாதானம் செய்யாது
நான் சொல்லும் ஆறுதல் நன்மைபயக்காது
நீ அராஜகத்தின், பைத்தியத்தின் ராணி
நீ யாருக்கும் சொந்தமில்லை
அப்படியே இரு
இருளில் வளரும் விருட்சம் நீ
ஒளியோ நீரோ உனக்கு வேண்டாம்
நீ சமுத்திரத்தின் இளவரசி
எல்லா ஆண்களையும் நேசிப்பாய்
எவரையும் நேசிக்கமாட்டாய்
எல்லோருடனும் படுக்கையைப் பகிர்வாய்
எவரோடும் படுக்கமாட்டாய்
நீதான் பெதூய்ன் தொல்குடிப்பெண் அத்தனைபேரோடும் போவாய்
கன்னியாய் மீள்வாய்
அப்படியே இரு
No comments:
Post a Comment