Friday, November 4, 2016

செம்மை ம.செந்தமிழன்

ஊர் திரும்புங்கள் எனக் கூறுவது, நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்ட வடிவம்தான்!

ம.செந்தமிழன்

செம்மை வாழ்வியல் வகுப்பின்போது, மக்கள் கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான எனது விளக்கங்களும்.

இப்பொழுது எல்லாம் கடைகளில் வாங்கும் காய்கறிகள், அரிசி, போன்றவற்றில் அதிகமான உரம் ரசாயனம்   இருக்கிறதே அதற்கு என்ன செய்ய வேண்டும்?

- விவசாயம் என்றாலே இயற்கையாகச் செய்வது தான். இரசாயன வேளாண்மையா இயற்கை வேளாண்மையா என்பதே தவறு. இரசாயனம் சேர்த்து செய்தால் அது வேளாண்மையே இல்லை. விவசாயம் என்றாலே இரசாயனம் கலக்காமல் விளைவிப்பது தான். அப்படி விளைவது தான் நல்ல காய்கறிகள். அது கிடைக்காத நிலைமைக்கு நாம் இப்பொழுது வந்து விட்டோம். பணம் இருந்தால் கூட நல்ல காய்கறிகள் கிடைக்காத வறுமையில் உள்ளோம்.

நஞ்சு இல்லாத உணவு வேண்டும் என்பது பெரிய புரட்சி இல்லை நமது அடிப்படை உரிமை. நாம் மிக மோசமான இடத்தில் உள்ளோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நஞ்சு இல்லாத காய்கறிகள் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கூட காய்கறிகள் கிடைக்காது. கடல் மீன் கூட நஞ்சு இல்லாமல் கிடைப்பது இல்லை அணுக்கழிவுகள் முழுவதையும்  கடலில் தான் கொண்டு போடுகிறார்கள்.

இந்த நிலைமைகள் மாற வேண்டும் என விரும்புங்கள். இயற்கையான சூழல் பெருக வேண்டும், இயற்கையான உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டுத் தோட்டங்களில் கவனம் செலுத்துங்கள். நிலம் வைத்திருப்போர், இயற்கை வேளாண்மையில் ஈடுபடுங்கள். எவராவது நமக்கு உற்பத்தி செய்து தருவார், நாம் அதை சாப்பிடலாம் என்ற நினைப்பிலிருந்து வெளியேறுங்கள். நிலம் இல்லாதோர், இயற்கை விளைபொருட்களைத் தேடி வாங்குங்கள்.

நஞ்சில்லா காய்கறி வாங்க வழி உள்ளதா?

- இயன்றவரை, அவரவருக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டால் தான் இதற்கு எல்லாம் மாற்று கிடைக்கும் 

விதை பற்றாக்குறை உள்ளதா?

அது அடுத்த கட்ட பிரச்சனை , உள்ள விதைகளுக்கே இன்று விவசாயம் செய்ய ஆள் இல்லை. சாதாரண செயல் திட்டம்தான் , பசுமைப் புரட்சியோ , வெண்மைப் புரட்சியோ இல்லை . சில காலத்திற்கு முன், நூற்றுக்கு எண்பது பேர் விவசாயம் செய்தார்கள். அவர்கள் தங்களுக்கான உணவையும் மீதமுள்ள இருபது பேருக்கான உணவையும் உற்பத்தி செய்தார்கள். இதைப் பெரும் வியாபாரமாக  மாற்ற நினைத்துதான் பசுமைப் புரட்சி என்ற கொடிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். எண்பது சதவீதமாக இருந்த விவசாயிகள் இப்போது ஏறத்தாழ அறுபது சதவீதமாகக் குறைந்துவிட்டார்கள். இவர்களால், மீதமுள்ள நாற்பது சதவீதத்தினருக்கு இயற்கையான உணவைக் கொடுக்க முடியாது. இயற்கையில், அவ்வாறு விளையாது .

உணவு உற்பத்தி செய்பவர்களை /விவசாயிகளை குறைப்பதுதான் திட்டமா ?

-  ஆம். அதுவே அவர்களது நோக்கம் . உணவு உற்பத்தியை பெரும் உற்பத்தியாக மாற்றவேண்டும், 5 சதவிகிதம் பேரே உணவு உற்பத்தி செய்ய வேண்டும். மீதமுள்ள 95 சதவிகிதம் பேரும் இந்த 5 சதவிகிதம் பேரையே உணவுக்காக
நம்பி இருக்கவேண்டும் . இவ்வாறு மாற்றுவதே திட்டம். இது அழகாக நடந்தேறி வருகிறது .இதைத் தடுக்கவே நாம் ஊர்திரும்புங்கள் ஊர்திரும்புங்கள் என்று கூறுகிறோம். இது சேவை அல்ல , தேவை.

உங்களுக்கு  தேவையானதாவதையாவது உற்பத்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மட்டுமாவது செய்து கொள்ளவேண்டும்.

அவ்வளவுதான் ஒருவரால் செய்ய முடியும். மறுபடியும் மறுபடியும் இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்து தருவார்கள் அவர்களிடம் நாம் இருபது ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்று எல்லாம் நினைத்து கொண்டு இருந்தால் அதுவெல்லாம் நடக்காது. ஊர் சந்தைக்கு காய்  வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள் சொல்கின்ற விலை தான் கொடுக்கின்றோம். அவர்கள் இடத்தில் போய் எடுத்துக்கொண்டு வருகின்றோம். தக்காளி விலை முப்பது ரூபாய் சொல்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் அது சரியான விலைதான். ஆனால் இருபது கிலோ தான் தருவேன் என்று சொல்கிறார்கள். ஊர் சந்தைக்கு வரும் கூட்டத்திற்கு ஒருவருக்கு ஒரு தக்காளி என்றால் கூட பற்றாக்குறையாக தான் இருக்கும்.

நாம் நடத்தும் ஒரு சின்ன சந்தைகே இவ்வளவு பற்றாக்குறை. நமக்கு நிறைய தொடர்புகள் உள்ளன.  கேட்டவுடன் வாங்கிக் கொடுப்பதற்கு நண்பர்கள் இருக்கின்றார்கள்.  பணம் இருக்கின்றது, வாங்குவதற்கு மக்கள் இருக்கின்றார்கள்.  அனைத்தும் இருந்தும் வாங்குவதற்கு காய்கறிகள் கிடைக்கவில்லை. ஊர் சந்தைக்கு வரும் அறநூறு எழுநூறு குடும்பங்களுக்கே காய் வாங்குவதில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் பொழுது ஏழு கோடி மக்களுக்கு என்ன செய்வது?

சென்னையிலேயே வாய்ப்பு இருக்கின்றவர்கள் சொல்லுங்கள் மாடியிலேயே தோட்டம் போடுவோம். முதலில் வெளி ஊரிலிருந்து காய்கறிகள் வரக்கூடாது என்ற முடிவை எடுத்து கொள்ளவேண்டும்.

வாய்ப்புள்ளோர் ஊர் திரும்புங்கள். வாய்ப்பில்லாதோர் வீட்டுத் தோட்டங்கள் அமையுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால், ஏழை எளியோருக்கும் இயற்கை உணவுகள் கிடைக்கும். இல்லையெனில், இயற்கை உணவு என்பது பணக்காரர்களுக்கான சந்தையாக மட்டுமே இருக்கும். அவ்வாறான நிலைமை நாம் வாழும் காலத்தில் உருவானால், அது நாம் செய்யும் பெரும் பாவம் என நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் எல்லாவற்றையும் சம்மாகப் படைத்த இறைக்கு மன்சாட்சிப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும். எனக்குள் இந்த அச்சமும் அக்கறையும் உள்ளது.

ஓரளவு செல்வம் உள்ளோர் இதைப் புரிந்துகொண்டு செயலாற்றினால், நம்மைச் சுற்றியுள்ள எளியோருக்கு நல்ல உணவு கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.

நாங்கள் 2012இல் உணவு திருவிழா ஓசூரில் நடத்தினோம். அது தான் தனியார் அமைப்பு நடத்திய முதல் பெரிய உணவுத் திருவிழா. அப்பொழுது விகடனில் அதை பற்றிய ஒரு பேட்டி வந்து இருந்தது. அப்பொழுது பூங்கார் இருபது ரூபாய், காட்டுயானம் வாங்குவதற்கு யாரும் இல்லை. அனால் இன்று பூங்கார் எழுபத்து ஐந்து ரூபாய். இதை எத்தனை மக்களால் வாங்க முடியும்? வாங்க முடியாது. எழுபத்து ஐந்து ரூபாய்க்கு விற்றாலும், இயற்கை விவசாயிக்குக் கட்டுப்படி ஆகுமா? அவர்களுக்கும் ஆகாது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் கூட இயற்கை விவசாயிக்கு ஆதாயம் இல்லை. இதுதான் பொருளாதாரம்.

இவ்வளவு மோசமான நிலைமை உணவிற்கு. அரிசி நஞ்சு இல்லாமலும் இருக்க வேண்டும் அதிகமான விலையும் இருக்கக் கூடாது. இரண்டையும் சமப்படுத்த வேண்டும்.

ஜூலை மாத ஊர் சந்தையில் பொது உரிமை அங்காடி என்று ஒன்று அறிமுகம் செய்தோம். ஒரு கிலோ அரிசி அறுபத்தி ஐந்து ரூபாய் அடக்க விலை அப்போது இருந்தது. நான்குஇ ரூபாய் கூடுதலாக வைத்து, ஒரு கிலோ 72 ரூபாய்க்கு விற்றால்,  யாரால் அரிசி வாங்கி செல்ல முடியும்?

வாங்குபவர்களுக்கும் லாபம் இல்லை விற்பவர்களுக்கும் லாபம் இல்லை. இதை முதலில் மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு லாரி வாடகைக்கு எடுத்து ஐநூறு கிலோ அரிசி கொள்முதல் செய்து அதை ஐம்பத்தெட்டு  ரூபாய் என்று விற்றோம். ஆனால் அதற்கு அடக்க விலை ஐம்பத்தைந்து  ரூபாய் வந்தது. இப்படி வேலை செய்தே  ஐம்பத்தி எட்டு ரூபாய்க்குத்தான்  இயற்கை அரிசி கிடைக்கின்றது . சிப்பம் சிப்பமாக மக்கள் வாங்கி கொண்டு சென்றார்கள். ஒரு கிலோ வாங்கியவர்கள் இருபத்தி ஐந்து கிலோ வாங்கினார்கள்.

இதில் இரண்டு ரூபாய் தான் ஊர் சந்தைக்கு லாபம். செம்மைச் சமூக மக்களின் உழைப்பைக் கணக்கிட்டால், அதுவும் இருக்காது. இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. முடிந்தவர்கள் உற்பத்தியில் ஈடுப்பட வேண்டும். பகுதி நேரமாவது ஈடுப்பட வேண்டும். சம்பாதிக்கும் பணத்தில் முதலில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும். அதிகமாக கூட இல்லை முதலில் ஒரு ஏக்கர் வாங்கினாலே போதும். அதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

ஊர் திரும்புதல் பற்றி பேசும்போதோ அல்லது வேளாண்மை பற்றி பேசும்போதோ நிறைய கேலிகளுக்கு உள்ளாகின்றோம். என்னையும் தனி பட்ட முறையில் நிறைய பேர் கேலிசெய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஊர் திரும்புங்கள் என நான் கூறுவது, இக்காலத்திற்கான சமூகப் போராட்டத்தின் வடிவம்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமது நிலங்களை வைத்து அவர்கள் சூதாட்டம் நட்த்தும்போது, நாம் நம் நிலங்களுக்குத் திரும்புவதுதானே சரியான போராட்டமாக இருக்க முடியும்!

போராட்டம் என்பது வாழ்வியல் நடைமுறைகளில் இருக்க வேண்டும் என்ற கொள்கையைத்தான் நான் நம்புகிறேன். அதைத்தான் மக்களிடம் பரப்புகிறேன். அதைத்தான் நானும் செம்மைக் குடும்பத்தினரும் செயல்வடிவமாக மாற்றிக்கொண்டுள்ளோம்.

நாங்கள் வெறும் பிரசாரம் செய்வோர் இல்லை, செயல் வடிவம் கொடுக்கிறோம்.

‘எங்கள் தாகத்திற்குத் தண்ணீர் இல்லை, நல்ல உணவு இல்லை, காற்றும் இல்லை. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கிழித்தீர்கள்?’ என என் சந்ததி என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும் நிலைமை உருவாகக் கூடாது என்பது என் விருப்பம். அந்த விருப்பத்தின் கட்டளைக்கேற்ற செயல் வடிவங்களில் ஒன்றுதான் ‘ஊர் திரும்புங்கள்’ என்பது.

No comments: