Friday, November 11, 2016

பணம் என்பது வெற்றுக் காகிதம்தான்!

பணம் என்பது வெற்றுக் காகிதம்தான்!
-கருப்புப் பண ’ஒழிப்புப் போர்’ குறித்து…

ம.செந்தமிழன்

முற்காலத்தில் இருந்த வெள்ளி, பொன், செப்பு நாணயங்கள் அவற்றுக்கான மதிப்பைத் தாங்கியிருந்தன. அதாவது, ஒரு பொற்காசு என்றால், அக்காசில் தங்கத்தின் எடை அதன் மதிப்பிற்கேற்ப இருந்தது. ஒரு மூட்டை நெல் வாங்க வேண்டுமானால், அரை பொற்காசு விலை கொடுக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். அந்த அரை பொற்காசில் இருக்கும் தங்கத்தை விலைக்கு விற்று, வெள்ளி அல்லது செப்பு நாணயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். சுருக்கமாகச் சொல்வதானால், அக்காலத்தில் இருந்த நாணயங்கள் வெற்றுக் காகிதங்கள் அல்ல. மாறாக, நாணயங்களே மதிப்புமிக்க செல்வங்களாக இருந்தன.

‘இன்று முதல் பொற்காசுகள் செல்லுபடியாகாது’ என்று அறிவிக்கும் அகந்தையும் தேவையும் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இருக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு அறிவித்தாலும், அப் பொற்காசுகளை உருக்கித் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆக, செல்வம் மக்களிடத்திலும் இருந்தது, அரசு அதிகாரத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே, பணத்தைச் சேர்த்து வைக்கக் கூடாது என்ற வழக்கத்தில் நானும் என் குடும்பத்தினரும் வாழ்ந்துவருகிறோம். தேவைகள் அனைத்தும் பரம்பொருளால் நிறைவேற்றப்படும் என்பதை நம்பிக்கையாக அல்ல, உணர்வாகக்கொண்டிருக்கிறோம். செம்மைவனத்தை முன்னிறுத்திப் பல பணிகள் செய்கிறோம். வருவாயை அவ்வப்போது செலவிடுகிறோம். இந்த வாழ்க்கையில் நாங்கள் அடையும் இன்பங்கள் அதிகம். ஒருசில அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த அவமானங்கள் வழியாகத்தான் இந்தச் சமூகத்தை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

கருப்புப் பணம் குவிவதைப் பற்றியோ, அதற்கு எதிராக மக்கள் முன்வைக்கும் கருத்துகளைப் பற்றியோ தனிப்பட்ட முறையில் நான் கவலைப்பட ஏதுமில்லை. எனக்கென விதிக்கப்பட்டுள்ள சமூகக் கடமைகளில் ஒன்றாக, சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இப்பதிவு அதற்கானதுதான்.

இப்போதுள்ள பணம் எனும் கருவி, ஒரு வெற்றுக் காகிதம். இக்காகிதத்தின் முழுக் கட்டுப்பாடும் அரசாங்கத்தின் பிடியில் உள்ளது. அரசாங்கமோ பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அக்காலம் போல, இந்த நாணயங்களுக்கென சுய மதிப்பு இல்லை. நீங்கள் அதிகம் படித்தவர்கள் என்பதால், உங்களுக்குக் கூடுதலான விளக்கம் தேவைப்படும் என நினைக்கிறேன்.

100 ரூபாய் உங்கள் ஊதியம் என்றால், அதன் உண்மையான மதிப்பைப் பின்வருமாறுதான் கணக்கிட வேண்டும்.
வருவாயில் பிடிக்கப்படும் வரி (TDS) – ரூ. 10 (சராசரி மதிப்பு)
தற்போதைய பணவீக்கம் தோராயமாக, 8.5% என்ற வகையில் – ரூ. 8.50
இந்த இரு பிடித்தங்களையும் உங்களால் தவிர்க்கவே இயலாது. ஏனெனில், இவை இரண்டும் அரசுத் துறைகளால் செய்யப்படுபவை. பணவீக்கம் என்பது என்னவென்றால், 100 ரூபாயில் ரூ.8.50 அளவிற்கு மதிப்பற்ற நிலை உள்ளது என்பதாகும். 100 ரூபாய் உங்களிடம் இருந்தால், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமைப்படி அதன் உண்மையான மதிப்பு, ரூ.91.50 மட்டும்தான். இதுதான் விலைவாசி உயர்வின் அடிப்படைக் காரணி. வரியைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆக, 100 ரூபாய் உங்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டால், அதன் மதிப்பு சராசரியாக, வெறும் ரூ.87 .50/- மட்டும்தான். ஒரு இலட்சம் ரூபாய் உங்களுக்குக் கிடைக்கிறதெனில், உண்மையில் நீங்கள் பெற்ற தொகை ரூ.ரூ.87,500/- மீதமுள்ள தொகையை வரியாகவும், பண வீக்கம் என்ற பேரில் பல்வேறு நிறுவனங்களும் பகிர்ந்துகொள்கின்றன.

நீங்கள் உழைக்கிறீர்கள், பணியாற்றுகிறீர்கள். உங்களுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் அந்த வருவாய் என்பது, உண்மையான மதிப்பே இல்லாத வெற்றுக் காகிதம். அந்தக் காகிதத்திற்கு என்ன மதிப்பு என்பதை அவ்வப்போது முடிவு செய்வதுதான் சேமவங்கி (ரிசர்வ் வங்கி) ஆற்றும் முதல் கடமை.

உங்களில் பெரும்பகுதியினர் கடன் பொருளாதாரத்தில் இருப்பதாக நினைக்கிறேன். வீடு, வாகனங்கள், செல்பேசிகள் உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் இப்போது கடனில் வாங்கப்படுகின்றன. அவற்றுக்கான வட்டி விகிதங்களை மேற்கண்ட 100 ரூபாயிலிருந்து கழித்துவிடுங்கள். தோராயமாக நீங்கள் செலுத்தும் வட்டி விகிதம் 14% என்றால், உங்கள் கையிருப்பு மதிப்பு ரூ.73.50/- உண்மையில் எல்லாக் கடன்களின் கூட்டு வட்டியும் மிக மிக அதிகமானவை. அது பெரும் கதை என்பதால், நீங்கள் நம்பிக்கொண்டுள்ளதைப்போலவே 14% என்ற கணக்கை மட்டும் கூறுகிறேன்.

தங்கம் வாங்கும் உன்னதப் பழக்கத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். தங்கத்தின் மதிப்பைத் தீர்மானிப்பவர்கள்தான் உலகெங்கும் போர்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் ஒரு பவுன் தங்கம் இருந்தால், அதன் பண மதிப்பு என்ன என நீங்கள் முடிவு செய்ய முடியாது. இருபத்து இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து தங்கம் வாங்கிவிட்டால், இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து அதே தங்கத்தின் விலை எவ்வளவாக இருக்கும் என கற்பனை செய்யக் கூட உங்களுக்கு உரிமை இல்லை. ஐந்து ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் உயர்ந்திருந்தால், இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று பொருள். அதாவது, ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பை இந்தியப் பணம் இழந்துவிட்டது என்று பொருள். அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் சில அரபுநாடுகள்தான் இவ்வாறான பணமதிப்பை இழக்காமல் நீடிக்கின்றன. இந்தியப் பண மதிப்பு வீழ்ந்து வெகு காலம் ஆகிறது. இனி அது நிமிரும் வழி ஏதும் இல்லை.

தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்ற கதையை நீங்கள் இப்போதும் நம்புகிறீர்கள். நம் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், ஒரு பவுன் தங்கத்தை விற்றால், ஒருவேலி நிலம் வாங்க முடியும். அப்போது தங்கத்தின் விலை 10 கிராம், ரூ.99/- அதாவது, ஒரு பவுனுக்கும் சற்று அதிகமான தங்கம் 100 ரூபாயை விடக் குறைவாகக் கிடைத்தது. 100 ரூபாயை வைத்து ஒருவேலி நிலம் வாங்க முடியும், ஒரு வீடு கட்ட முடியும், மாட்டு மந்தையை வாங்கலாம், இன்னும் பல மதிப்பு மிக்க செல்வங்களை ஒரு பவுன் தங்கத்திற்கு ஈடாக வாங்கலாம்.

இப்போது சில வளர்ப்பு நாய்களின் விலை ஒரு பவுன் தங்கத்தைவிட அதிகம். தங்கம் இப்போது செல்வமல்ல. அதை நீங்கள் எவ்வளவு சேர்க்கிறீர்களோ அவ்வளவு பணத்தை விரயமாக்குகிறீர்கள் எனப் பொருள். இன்னும் சில காலத்தில் ‘தங்கம் பதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று முதல் தங்கத்தின் மதிப்பு குறைக்கப்படுகிறது’ என்ற ஒற்றை அறிவுப்பு கூட அனைத்துச் சேமிப்புகளையும் முடித்து வைக்கும்.

தங்கத்தை வைத்து உங்களால் சுயமாக ஒரு நகை செய்ய முடியுமா? நகை ஆசாரிகள் இனமே ஏறத்தாழ அழிந்துவிட்டது என்பதைக் கவனித்ததுண்டா? இப்போது நீங்கள் வாங்கும் நகைகளை, பெரும் நகை வணிக நிறுவனங்களில் மட்டும்தான் மாற்றவோ, விற்கவோ முடியும். அவற்றை அழித்து வேறு நகை அல்லது பொருள் செய்ய வேண்டுமானால் அதற்கான மரபுத் தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்னும் சில காலத்தில் மிஞ்ச மாட்டார்கள்.
நகையை வைத்து என்ன செய்யலாம்? நகையை அடகு வைக்கலாம்.

உலகில் அதிகளவு தங்கம் வைத்திருக்கும் நிறுவனங்களில் இரண்டாவது இடம் வகிப்பது, முத்தூட் (Muthoot) என்பதை அறிவீர்களா?

இதன் பொருள் என்ன? எவ்வளவு அதிகமாக நகை வாங்குகிறீர்களோ அவ்வளவு வேகமாக அவற்றை அடகு வைக்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் நகைக் கடன் வட்டி விகிதம் சட்ட விரோதமானது. ஏறத்தாழ  24% வட்டியை அந்நிறுவனம் நகைக் கடன்களுக்கு விதிக்கிறது. சட்டவிதிகளை ஏமாற்றுவதற்காக, நகைக் கடன் வட்டி என எழுதாமல், ‘நகை முன் பணம்’ என சீட்டு தருவார்கள்.

வீட்டு மனைகளை வாங்கிக் குவித்த கதை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. ஒரு வீடு கட்டுவதற்குக் கூட வங்கிகளில் கடன் வாங்கும் மக்கள், இரண்டு மூன்று வீட்டு மனைகளை வாங்கிப் போடுகிறார்கள். இவர்களது பொருளாதார அறிவை என்னென்று வியப்பது!

கடன் வாங்காமல் வீடு கட்ட வேண்டுமானால், குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்குப் பணம் சேர்க்க வேண்டும். பணத்தைப் பணமாக பத்தாண்டுகளுக்கு வைத்திருந்தால், அது பணம் அல்ல, பாதிக் காகிதம். ஏனெனில், பத்தாண்டுகளில் பணவீக்கத்தின் அளவும், இந்தியப் பொருளாதாரத்தின் சரிவும் கற்பனைக்கெட்டாத வகையில் இருக்கும். 1996 , 2006 ஆகிய ஆண்டுகளில் 100 ரூபாய்க்கு இருந்த மதிப்பையும், இப்போது இருக்கும் மதிப்பையும் நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். 2026 ஆம் ஆண்டு, 100 ரூபாய் எனும் ஒரு தாள் இருக்கவே வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, தெரியவில்லை!

ஆக, பணத்தைப் பணமாகச் சேர்ப்பதும் வீட்டில் காகிதக் குப்பைகளைச் சேர்ப்பதும் ஏறத்தாழ ஒன்றுதான். பணத்தைத் தங்கத்தில் போட்டால், தங்க நிறுவனங்கள் கொழிக்கும். பணத்தை வீட்டு மனைகளில் போட்டால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கொழிக்கும், கட்டுமான நிறுவனங்கள் செழிக்கும், கடன் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கும்.

வங்கிகளில் சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி சராசரியாக 8% என்றளவில் உள்ளது. பணவீக்கமோ இந்த வட்டியை விடக் கூடுதலாக உள்ளது. அதாவது, உங்கள் சேமிப்பை வாங்கி வைத்துக்கொள்ளும் வங்கிகள், உங்களுக்கு அப்பணத்தின் உண்மை மதிப்பை விட குறைவாகத் திருப்பித் தருகின்றன.

500, 1000 ரூபாய்களை வங்கியில் கணக்கு காட்டினால் கருப்புப் பணம் ஒழியும் என்ற புதிய திரைப்படத்தை இரசிப்பவர்களிடம் ஒரு தகவலைக் கூற வேண்டும். கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருக்கிறார்களே, அவர்களில் பெரும்பகுதியினர் பின்வரும் ’தொழில்களில்’ ஈடுபடுவோர்தான்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நகை நிறுவனங்கள், வட்டிக்கு விடுதல், நிலவணிகம், அரசியல், மணல் கொள்ளை, மலைக்கொள்ளை, கட்டுமான ஒப்பந்தங்கள்.
மேற்கண்ட ‘தொழில்’களில் ஈட்டிய பணத்தைத்தான் அவர்கள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். 

இனிமேல் இவர்களிடம் கருப்புப் பணம் சேராது என்று கூறுமளவுக்கு சமூகத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது எனக் கூறுங்கள்.
’இனி என் பிள்ளைகளைப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கமாட்டேன். சேர்த்தாலும் சட்டப்படியிலான கட்டணம்தான் தருவேன்’ என எல்லோரும் முடிவு செய்துவிட்டீர்களா?
‘இனி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் தரமாட்டேன்’ என சத்தியம் செய்துவிட்டீர்களா?
‘இனி, என் வீட்டில் மலைக் கற்களை (கிரானைட்) பயன்படுத்தமாட்டேன். இனி கடனில் வீடு வாங்க மாட்டேன். இனி. வட்டிக்குப் பணம் வாங்க மாட்டேன். இனி தேவைக்கதிகமாக நகை சேர்க்க மாட்டேன். இனி, வணிகமயமான மருத்துவமுறைகளை நாட மாட்டேன்’ என்றெல்லாம் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எல்லோரும் வகுத்துவிட்டீர்களா?

ஒருவேளை இவ்வாறெல்லாம் நடந்தால், நாட்டில் கருப்புப் பணம் இருக்காது.
எப்போதும்போலத்தான் மக்களது வாழ்க்கைமுறை இருக்குமென்றால், கருப்புப் பணம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது.

என் கருத்துகளுடன் உடன்படுவோருக்கு நான் கூற விரும்பும் சேதி மிகச் சுருக்கமானது.
‘சமூகத்தில் நிகழ்ந்த எல்லா சீரழிவுகளையும் அனுமதித்துவிட்டு,  அச்சீரழிவுகளில் தெரிந்தும் தெரியாமலும் பங்காளியாகவும் இருந்துகொண்டு, சிக்கல்களைக் கண்டு கொந்தளிப்பது வீண் செயல். எப்போது உங்களால் நிறுவனங்கள் இல்லாத வாழ்க்கையைச் சிந்திக்க முடிகிறதோ அப்போதுதான், செல்வம் சேரும். அதுவரை வெறும் காகிதங்களையும் கடன் அட்டைகளையும்தான் வைத்திருக்க வேண்டும்’

’வங்கிகளில் கணக்கு காட்டாமல் இனி பணத்தை வைத்திருக்க முடியாது’ என பெருமிதமாகப் பேசுவோருக்கு ஒரு சிறு தகவல். ‘இந்திய வங்கிகளில் உள்ள வராக் கடன் தொகையின் அளவு 3 இலட்சம் கோடி’. அதாவது,  வாங்கிய கடனைத் திருப்பித் தராத நிறுவனங்களுக்கு இந்தியாவின் அரசு வங்கிகள் இதுவரை வாரிவழங்கிய தொகை, 3 இலட்சம் கோடி ரூபாய். விஜய் மல்லையா போன்ற ‘ஏழைகள்’ அந்தப் பட்டியலில்தான் இருக்கிறார்கள்.

நம்புங்கள், இந்தியாவின் அரசு வங்கிகள் ’முறையாக’ச் செயலாற்றி, கணக்கு கேட்டு, கருப்புப் பணத்தை ஒழித்துக்கட்டப்போகின்றன! அந்த நம்பிக்கையுடன் எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கையை நடக்கட்டும்!
ஜெய்ஹிந்த்!

No comments: