1971இல் வெளியான The Emigrants எனும் படம் பார்த்தேன். படம் காட்சிகளே உணர்வுக் குவியலாக இருக்கிறது. படத்தின் கதை என்று பார்த்தால் 1840 களில்பஞ்சம் பிழைக்க புதிய நிலம் தேடிப் பயணப்படும் ஒரு சுவிஸ் வேளாண்மைக் குடும்பம் பற்றியது. அவ்வளவு தான். ஆனால் காட்சிகளை ஆலாபனை செய்வதில் தான் படத்தின் முழு வெற்றியுமே.
சுவிசின் சிறு விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் இயற்கையிடம் போராடித் தோற்கும் காட்சிகள் ஒரு துயரத்தின் துவக்காமாகவே இருக்கிறது. இரு சிறுவர்கள் பெரும் நிலக்கிழாரிடம் அடிமைகளாக குதிரைச் சாணி ஆளுவதும் உண்ணிகளைப் பிடுங்குவதும் என்று வேலை செய்கிறார்கள். கையில் கிடைத்த natural science புத்தகம் வழியே அமெரிக்காவைப் பற்றிய கனவுகளை வளர்க்கிறான். அமேரிக்கா என்கிற வாக்களிக்கும் பூமியில் அதிபரையே பேர் சொல்லித் தான் அழைப்பார்கள். ஐரோப்பாவின் சாதி அடுக்குமுறைகள் அங்கு கிடையாது என்று பலவற்றையும் கற்பனை செய்து கொள்கிறான். நிலக்கிழாரிடம் அடி தாங்காமல் காயம்பட்டு வீடு திரும்பும் அவன் தன்னுடைய சகோதரனிடம் அமேரிக்கா போகும் திட்டத்தைச் சொல்கிறான். அவனுக்கும் அதே கனவு. அமெரிக்காவில் யாரும் ரயில்த் தடம் போட வைத்திருக்கிற இரும்பைக்கூட திருட மாட்டார்கள். அவ்வளவு இரும்பு அவ்வளவு நிலம் என்று கப்பல் ஏறுகிறார்கள். இடையில் கடல் ஒவ்வாமை குழந்தை இறப்பு காவுகளை வாங்கும் கடல் நோய் என்று அவதி படுகிறார்கள்.
அமெரிக்காவில் இறங்கியதுமே அவ்வளவு சுலபமில்லை வாழ்க்கை. ஆனால் நிலங்களைக் கண்டடைகிறார்கள்.
இந்தப் படம் எனக்குப் பிடிக்க இன்னொரு காரணம் இருக்கிறது. புதிதாக குடியேறிய ஐரோப்பியர்களைப் பற்றிய சித்திரம் இதுவரை பைபிள்மற்றும் கத்தியோடு உள்ளே இறங்கினார்கள் என்பது. அதன் இன்னொரு புறம் தான் இந்தக் கதை. குழந்தைகளின் சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் அடுத்த மரணம் என்கிற பயம் வந்துவிடுகிறது. மக்களின் பாடுகளும் அவர் தம் கனவுகளும் அடுத்தடுத்து இருத்தலை வெல்ல வாழ்க்கை மீது கொள்ளும் பற்றுமே காட்சியாக கலங்க வைக்கிறது.
மேற்குலகின் அத்தனை அரசியல் பொருளியல் கோணங்களையும் எத்தனை படங்கள் வந்தாலும் பார்க்க வேண்டும். நாமும் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் குடிகள். நமது காரணிகள் என்ன? நமக்கு அவர்களைப் போல அல்லாமல் 2000 வருடத்திற்கு மேற்பட்ட மேல் மண் வேளாண்மை செய்து எங்கும் எதுவும் செய்ய முடியும். ஆனால் நாமும் அகதி வாழ்க்கை வாழ்கிறோம். அப்படி என்றால் நம்மை எது துரத்துகிறது?
No comments:
Post a Comment