“இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்க சொல்றத எங்க கேக்குறாங்க?” என்று நம் ஊர்ப் பெரியவர்கள் புலம்புகின்றனர். அமெரிக்காவிலோ நிபுணர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பொதுமக்கள் பொருட்படுத்துவதில்லை என்ற ஆதங்கம் பரவிவருகிறது. அங்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனல்டு டிரம்ப் என்பவரின் கொள்கைகளை நிபுணர்கள் குறை சொல்கிறார்கள். ஆனால், பொதுமக்களோ அவற்றைக் கைதட்டி வரவேற்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்தார்கள். ஆனால் விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்தது நமக்குத் தெரியும்!
பொருட்படுத்தாத மக்கள்
உலகளாவிய வெப்பநிலை மற்றும் வானியல் கூறுகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மோசமான பாதிப்புகளைப் பற்றி எல்லா விஞ்ஞானிகளும் எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், மக்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல், கரிம எரியன்களைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்திக்கொண்டும் மரங்களையும் காடுகளையும் அழித்துக் கொண்டும் வருகிறார்கள். மக்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அறிஞர்களாலும் உளவியல் வல்லுநர்களாலும் விளக்க முடியவில்லை.
இதற்குச் சரியான காரணம், மக்கள் அடி முட்டாள்களாக இருப்பதுதான் என்று மக்களைத் தொடர்ந்து கூர்ந்து நோக்கி வரும் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல... திருவாளர் பொது ஜனத்துக்கு அறிவுக்கூர்மை மிகக் குறைவு. போதுமான கல்வியறிவும், வாதப் பிரதிவாதங்களைச் சீர்தூக்கிப் பார்த்துச் சரியான முடிவுக்கு வரும் திறனும் பற்றாக்குறையாக உள்ளன என்றும் சொல்கிறார்கள். உண்மையில், எந்தவொரு பிரச்சினையையும் எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து சரியான வழிகளைக் காட்டக்கூடிய சமூக மற்றும் அரசியல் தலைமைகளும் பற்றாக்குறையாகவே உள்ளன. சரியான தகவல்களும் தரவுகளும் மெனக்கெட்டுத் தேடப்படுவதில்லை.
மக்கள் முட்டாள்கள் அல்ல
தமது ஆலோசனைகள் ஏற்கப்படாதபோது, திருவாளர் பொதுஜனம் ஒரு முட்டாள் என்று வல்லுநர்கள் தீர்ப்பு சொல்வார்கள். ஆனால் அது சரியல்ல. பொது மக்களில் பெரும்பான்மையினருக்கு அடிப்படையான விஷயங்களையும், வாதங்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் அடிப்படை அறிவு இருக்கவே செய்கிறது. அவர்களுடைய பொது அறிவும் கல்வித் திறனும் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. இணைய வசதி இருந்தால், எந்தவொரு தகவலையும் முழுமையாகச் சில விநாடிகளில் திரட்டிவிட முடியும்.
அடுத்து, திருவாளர் பொது ஜனத்துக்கு, நிபுணர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் பேரிலான நம்பிக்கை குறைந்து வருகிறது என்ற கருத்து பரவியுள்ளது. அதுவும் தவறான கருத்து என்பதற்கான சான்றுகள் மேலும் மேலும் கிடைத்துவருகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கல்வியாளர்களும் தொழிலியல் வல்லுநர்களும் 70% மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பதாகக் காட்டுகின்றன. இத்துடன் ஒப்பிடுகையில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை 43% மக்களும், அரசு அதிகாரிகளை 38% மக்களும் மட்டுமே நம்புகிறார்கள்.
புத்திசாலிகளின் முட்டாள்தனம்
முக்கியமான விஷயங்களைப் பற்றி நிபுணர்கள் கூறும் கருத்துகளைப் பொது மக்கள் புறக்கணிப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மனித மனம் தகவல்களை எப்படிப் பகுப்பாய்வு செய்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். மாட்ஸ் ஆல்வசன் என்பவர் ‘புரிந்துகொள்ள முடியாத முட்டாள்தனம்’ (The Stupidity Paradox) என்ற தலைப்பில் அதைப் பற்றி ஓர் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். உலகில் புத்திசாலித்தனமான மக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது என்றாலும், அவர்கள் ஏன் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று அவர் வியப்பு தெரிவிக்கிறார். மனிதர்களின் உடன் பிறந்த விருப்பு - வெறுப்புகள், நம்பிக்கைகள், அல்லது தற்செயலான அறிமுகங்கள் அல்லது தொடர்புகள் போன்றவற்றின் அடிப்படையில் பலர் முடிவெடுக்கிறார்கள். இவ்வாறான சில முடிவுகள் இமைப்பொழுதில் எடுக்கப்பட்டுவிடும். ஆனால், அதன் பிறகு அந்த முடிவு சரியானதுதான் என்பதை நிரூபிக்கப் பல நாட்கள் தேவைப்படும். அதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.
பெரும்பாலானவர்கள் ஒரு முடிவை எடுத்த பிறகே அதற்கான நியாயங்களையும் காரணங்களையும் தேடுகின்றனர். தமது திடீர் முடிவுகள் சரியானவையே என்று நிரூபிக்கப் பாடுபடுகிறார்கள். அவை தவறாக இருக்கலாம் என்று காட்டக்கூடிய தகவல்களைப் புறக்கணிக்கிறார்கள். தமது நம்பிக்கைகள் தவறானவை என்று நிரூபிக்கக் கூடிய தகவல்களைக் கண்டு சங்கடமடை கிறார்கள். தமது நம்பிக்கைகளையும் செயல்களையும் மீள் ஆய்வுக்கு உட்படுத்தத் தயங்குகிறார்கள்.
உணர்வு நிலை அபஸ்வரம்
அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து கள் பல வேளைகளில் சங்கடப்படுத்து கிறவையாகவே இருக்கும். தான் கொண்டிருந்த கருத்துகளைக் கைவிட வேண்டியிருப்பது வெட்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் தனது நிலையிலிருந்து இறங்கிவருவதை மிகுந்த மனக் கஷ்டத்துடனேயே செய்வார். அத்தகைய சங்கடமான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவே மக்கள் முனைவார்கள். அதை ‘உணர்வு நிலை அபஸ்வரம்’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். தமது நம்பிக்கைகளுக்கு முரணான தகவல்கள் எதிரிட்டால், நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வதைவிட தகவல்களை அவற்றுக்கேற்ப திரித்துக்கொள்வதையே மக்கள் விரும்புகிறார்கள். பல நிறுவனங்கள் நசித்துப்போனதற்கு, அவற்றின் நிர்வாகிகள் தாம் எடுத்த முடிவுகளுக்கு ஏற்றபடி தொழில்துறைப் புள்ளிவிவரங்களைத் திரித்து வெளியிட்டதே காரணம்.
நிபுணர்களின் அறிவுரைகள் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்பதோ தமக்குச் சமமான அந்தஸ்தில் உள்ளவர் களுடன் ஆரோக்கியமற்ற விவாதங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பதோ மக்கள் அவற்றைப் புறக்கணிக்கக் காரணமாகின்றன. தமக்குச் சமமான இடத்தில் இருப்பவர்களின் மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்வதே நல்லது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இத்தகைய மனோபாவம் ஒரு வட்டத்துக்குள் சுமுகமான உறவுகளை வளர்த்து, அந்த வட்டத்திலிருந்து வெளியேற்றப்படாமலிருக்க உதவுகிறது. ஆனால், நீண்ட கால விளைவாக ஒரு மந்தை மனோபாவம் ஏற்பட்டுவிடக்கூடும். அதேசமயத்தில், வேறுவித மதிப்பீடுகளைக் கொண்ட இன்னொரு போட்டி மந்தை உருவாகிவிடும் ஆபத்தும் நேரும். அது முதல் மந்தையைவிட வலுவானதாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் இருந்துவிடக் கூடும்.
முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய பொருளாதார நிபுணர்களின் கருத்துகளைப் பொதுமக்கள் அவ்வளவாகப் பொருட்படுத்துவ தில்லை. பொருளாதார நிபுணர்களைவிடவும் அரசியல்வாதிகளே மக்களை அதிகமாகக் கவர்கிறார்கள். மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ, அதைத்தான் அரசியல் வாதிகள் பேசி மயக்குவார்கள். பொருளாதார நிபுணர்களைப் போல உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்க மாட்டார்கள்!
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.
No comments:
Post a Comment